Wednesday, May 5, 2010

குடி அரசு - 1925 முகவுரை வெளியீட்டாளர் உரை

1925 மே திங்களில் பெரியார் ' குடிஅரசு ' இதழை தனது நண்பர் ஈரோடு வா.மு.தங்கப்பெருமாள்பிள்ளையையும் ஆசிரியராக உடன் இணைத்துக்கொண்டு தொடங்குகிறார். உடல் நலம் சீர்கெட்ட வா.மு.த 19.7.1925 இதழுடன் விலகிட பெரியார் மட்டுமே தொடர்ந்து நடத்துகிறார்.

2.5.1925 இல் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளைக் கொண்டு 'குடிஅரசு' இதழை வெளியிட்ட பெரியார், சோவியத் புரட்சி நாளான நவம்பர் 7 ஆம் நாளைத் தேர்ந்தெடுத்து 1928 இல், 'ரிவோல்ட்' ( Revolt ) என்ற ஆங்கில வார ஏட்டைத் தொடங்கி 55 இதழ்கள் வரையும் வெளியிட்டுள்ளார். 20.11.1933 இல் 'புரட்சி ' என்ற வார ஏட்டைத் தொடங்கி சிறிது காலம் நடத்தியுள்ளார். அதன்பின் 15.3.1934 இல் 'பகுத்தறிவு' என்ற நாளேட்டைத் தொடங்கி இரண்டு மாத காலத்தில் நிறுத்தி, அதையே தொடர்ந்து வார ஏடாகவும் 1.5.1935 முதல் மாத ஏடாகவும் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் நடத்தியுள்ளார். 1.6.1935 இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் நீதிக்கட்சியால் வாரம் இருமுறை ஏடாகத் துவங்கப்பட்ட ' விடுதலை' இரண்டாண்டுகள் கழித்து நாளேடாக மாற்றம் பெற்று இன்று வரை வெளிவருகிறது. 1970 ஜனவரியில் மாத ஏடாகத் தொடங்கப்பட்ட ' உண்மை' ஏடு இன்று வரை மாதம் இருமுறை ஏடாக வெளிவருகிறது. 1971 செப்டம்பரில் துவங்கப்பட்ட ' The Modern Rationalist ' என்ற ஆங்கில மாத ஏடும் இன்று வரை வெளிவருகிறது.

இவ்விதழ்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது 'குடிஅரசு' ஆகும். தமிழ் இதழியல் வரலாற்றில் பெரும் சிந்தனைப் புரட்சியையும், தமிழ்நாட்டு மக்கள் வாழ்வியலில் பெரும் தாக்கத்தையும் உண்டாக்கிய பெருமை 'குடி அரசு'க்கு உண்டு.

குடி அரசு ஏடு துவங்கப்பட்டபோது ' எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம்', 'சாதிகள் இல்லையடி பாப்பா' போன்ற பாரதி பாடல்களும், தலையங்கப் பகுதியில் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்', 'ஒழுக்கமுடைமை குடிமை,' 'வேல்அன்று வென்றி தருவது' ஆகிய குறள்களும்,

அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி

அரும்பசி எவர்க்கும் ஆற்றி........

என்ற பாடலும் வெளியிட்டது. மக்கள் அனைவரும் சமம் என்னும் கோட்பாட்டை அவ்வேடு வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. முகப்பின் ஒரு பக்கத்தில் மசூதி, மாதா கோயில், இந்துக்கோயில் மூன்றும் பொறிக்கப்பட்டிருந்தாலும், 'குடிஅரசு' துவங்கிய சில இதழ்களிலேயே மத மூடநம்பிக்கைகளை விமர்சனம் செய்யும் பகுத்தறிவுக் கட்டுரைகள் இடம்பெறத் துவங்கியுள்ளன.

ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முந்தைய 'குடிஅரசு' இதழ்கள் நமக்கு முழுமையாகக் கிடைப்பது அரிதாகவே உள்ளது. அவை அச்சேறி வெளிவந்தால்தான் பெரியாரைச் சரியாகப் புரிந்து கொள்ள முயல்வோருக்கும், பெரியார் ஆய்வாளர்களுக்கும், பெரியார் ஆர்வலர்களுக்கும் பெரியாரின் உருமலர்ச்சி - வளர்ச்சியை மட்டுமின்றி, அன்றைய சமுதாய, அரசியல் சிக்கல்களையும் புரிந்துகொள்ளப் பேருதவியாக இருக்கும். 1983 இல் பல பெரியார் பற்றாளர்கள் ஒரு குழுவாக இணைந்து, தொடர்ந்து மூன்று கோடை விடுமுறைகளில் பணியாற்றி, ' குடிஅரசு ' இதழ்களில் இருந்து, பெரியார் எழுதியதாக அவர்கள் கருதிய கட்டுரைகள், இதழில் வெளிவந்த பெரியாரின் சொற்பொழிவுகள், இரங்கலுரைகள் ஆகியவற்றைத் தொகுத்து கையெழுத்துபடி எடுத்து, திராவிடர்கழகத் தலைமையிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆனால், என்ன காரணத்தாலோ அவை இதுவரை அச்சேற்றப் படாமலேயே கிடந்து போய்விட்டது.

இந்நிலையில் தொகுக்கப்பட்ட அக்கட்டுரைகளின் படிகள் எங்களுக்குக் கிடைத்தன. கிடைத்த கட்டுரைகளில் சில முழுமையாக இல்லாதிருந்ததையும் நாங்கள் உணர்ந்தோம். எப்படி இருப்பினும் அவற்றை அச்சு வடிவில் வெளிக்கொணர வேண்டும் என்ற ஆவல் எங்களிடம் மேலோங்கி நின்றது.

எழுதியவர் பெயர் குறிப்பிடாமல் எழுதப்பட்டிருந்த அக்கட்டுரை களில் எவை எவை பெரியாரால் எழுதப்பட்டவையாக இருக்கலாம் என்பதை நாங்களாகவே எழுத்து நடை, வாதிடும் முறை, வெளிப்படும் உணர்வு ஆகியவற்றை வைத்து ஊகித்து, தொகுத்து எழுதப்பட்டிருந்த வற்றில் சிலவற்றை நீக்கி விட்டோம். மற்றபடி தொகுத்து எழுதியிருந்தவற்றை அப்படியே அச்சேற்றியதன்றி நாங்கள் எவ்வித ஒப்பீடும், ஆய்வும் , தேடலும் செய்யவில்லை என்பதை வெளிப்படையாகவே கூறிக்கொள்கிறோம். 'அரசியல் நிலை' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள மூன்று தலையங்கங்கள், 'சிறீமான் பி.தியாகராயச் செட்டியார் மரணம்' என்ற இரங்கல் செய்தி ஆகியவற்றின் எழுத்து நடையையும், பொருளடக்கத்தையும் கருதிப்பார்க்கிறபோது யார் எழுதியது என்பதில் அய்யமுள்ளது. மேலும் 'குடி அரசு' இதழ் தொடக்க விழாவில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் ஆற்றிய உரையையும், இதழியல் அறநெறியைச் சுட்டிக்காட்ட, சுதேசமித்திரனுக்கு எழுதி அதில் வெளியிடப்படாத கோவை திரு.ஏ.சண்முக சுந்தரம்பிள்ளை என்பாரின் மறுப்புக் கடிதத்தையும் படிப்போர் அறியவெனத் தந்துள்ளோம்.

எனவே, தொகுப்பு முழுமையான தொகுப்பு என்று எங்களால் உறுதிபடக்கூறமுடியாவிட்டாலும், எங்களின் இம்முயற்சி ஒரு முழுமையான தொகுப்பில் முடியாதா என்ற ஏக்கமும், முடியவேண்டும் என்ற ஆசையும், முடியும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உறுதியாக உண்டு.

ஓலைச்சுவடிகளாக இருந்த தமிழ் நூல்களெல்லாம் அழிந் தொழிவதைக் கண்டு அவற்றை அச்சு வடிவில் கொண்டுவர வாழ்நாள் முழுவதையும் ஒப்படைத்துக்கொண்டவரும், உ.வே.சாமிநாத அய்யர் பிறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே தமிழிலக்கியப் பதிப்புகளை வெளிக்கொண்டுவரத் தொடங்கிவிட்டவருமான அறிஞர் சி.வை. தாமோதரனார்

" நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும், கையெழுத்துப் பிரதிகளின் கதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும்

பார்த்துச் சகிக்க முடியாமையொன்றே என்னை இத்தொழிலில் வலிப்பது"

".............................. ஆதலால், பண்டிதர், கவிராஜபண்டிதர், மகாவித்துவான், புலவர் என்றின்ன பெரும் பட்டச்சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந் தமிழ் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என் போலியரே இதில் கையிடுவது பேரவசியமாயிற்று " என்று ஓர் பதிப்புரையில் கூறியிருப்பதுவும்,

தமிழர் உரிமை மீட்பர் பெரியார் " .......... அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப்பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்......." என்று கூறுவது போலவே தான் எங்கள் முயற்சியும் என்பதைத்தான் இந்த நிலையில் நாங்கள் கூறிக்கொள்ள முடியும்.

1925 நவம்பர் இறுதிவரை பெரியார் காங்கிரஸ் கட்சியில் - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தார் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு படித்தால் பெரியாரை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளமுடியும்.

'குடிஅரசு' ஏட்டிலிருந்து இவற்றை எடுத்து எழுத தங்களது மூன்று கோடை விடுமுறைகளைச் செலவிட்ட அந்தத் தோழர் களுக்கும் ( காண்க : பிற்சேர்க்கை I ) எடுத்து எழுதப்பட்ட 'குடிஅரசு' கட்டுரைகளின் படியை, அணூகிக்கேட்டவுடன் தயங்காது எங்களுக்குக் கொடுத்துதவிய தஞ்சை வழக்குரைஞர் தோழர் இரா.பாண்டியன் அவர்களுக்கும், கணினியாக்கம் செய்துகொடுத்த சின்னாளப்பட்டி தோழர் தி. தாமரைக்கண்ணன் அவர்களுக்கும், கட்டுரைகளை வகைப்படுத்தி முழுவடிவ மாக்கியும், மெய்ப்பு பார்த்து பிழை திருத்தியும் இரவுபகல் பாராது உழைத்துதவிய மேட்டூர் தோழர் ப. தமிழ்க்குரிசில் அவர்களுக்கும், அவருக்கு உதவிய மேட்டூர் கழகத் தோழர்களுக்கும், மேலட்டையை வடிவமைத்துக் கொடுத்த தோழர் யாக்கன் அவர் களுக்கும், அழகுற அச்சிட்டுக்கொடுத்த மதுரை அன்பு அச்சகத் தாருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதையொத்த தொகுப்புகளைத் தொடர்ந்து வெளியிடத் திட்டமிட்டுள்ள எங்களுக்குப் பெரியாரின் எழுத்துக்கள், சொற்பொழிவு ஒலிப்பேழைகள் உள்ளவர்கள் அனுப்பியும், குறைகளைச் சுட்டியும், நூல்களை வாங்கியும் ஊக்குவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தோழமையுடன்,

கொளத்தூர் தா. செ. மணி

தலைவர்,

தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

நாள் : 29. 11. 2003

Tuesday, November 3, 2009

ரெட்டி பிரதர்ஸ் - கர்நாடக அரசியல் ஒரு பார்வை

ஒட்டு மொத்த இந்தியாவே உற்றுப்பார்க்கும் வகையில் கர்நாடக அரசியலில் திடீர் சூறாவளி புயலை ஏற்படுத்தி விட்டனர் ரெட்டி சகோதரர்கள்.
இவர்களை பெல்லாரி சகோதரர்கள் என்றும் அழைக்கிறார்கள்.

ரெட்டி சகோதரர்கள் மொத்தம் 3 பேர்.
மூத்தவர் கருணாகர ரெட்டி (வயது47), 2-வது சகோதரர் ஜனார்த்தன ரெட்டி (45), கடைசி சகோதரர் சோமசேகர ரெட்டி (43). இவர்களது பூர்வீகம் ஆந்திரா. தொழில் நிமித்தம் காரணமாக கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்துக்கு சென்றவர்கள். அங்கேயே செட்டிலாகிவிட்டனர்.

பெல்லாரி மாவட்டம், இந்தியாவில் தாதுப்பொருள் சுரங்கத்தொழிலில் நம்பர்-ஒன் மாவட்டமாகும். இந்த மாவட்டம் முழுவதும் சுரங்கத் தொழில் நடக்கிறது. இதனால் இந்திய சுரங்க தொழிலின் தலைநகரம் என்று பெல்லாரி நகரை அழைக்கிறார்கள்.இந்த சுரங்கங்களில் கணிசமானவை ரெட்டி சகோதரர்கள் வசம்தான் உள்ளது. ஒவ்வொரு சுரங்கமும் பல ஆயிரம் கோடியை வாரி, வாரி கொடுத்துக் கொண்டிருக்கிறது. பணத்துக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் கள் கோடிகளின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
இந்த பொருளாதார வசதி அவர்களுக்கு ஆள்பலத்தை தானாகவே தேடி கொடுத்து விட்டது. ரெட்டி சகோதரர்களிடம் உள்ள சிறப்பு குணம், மற்றவர் களுக்கு உதவுவது.

பெல்லாரி மாவட்டம் முழுவதும் நலச்சங்கங்கள் அமைத்து உதவிகள் செய்து வருகிறார்கள். இதனால் பெல்லாரி மாவட்டத்தில் ரெட்டி சகோதரர்களுக்கு மக்களிடம் அபரிதமான செல்வாக்கு உள்ளது. பணபலம், ஆள்பலம் மிக்க இவர்களுக்கு அரசியல் பாரம்பரியம் எதுவும் கிடையாது. அவர்கள் அரசியலில் காலடி எடுத்து வைத்தே சுமார் 10 ஆண்டுகள்தான் ஆகிறது. மிக குறுகிய காலத்தில் அவர்கள் கர்நாடகா அரசியலில் அசைக்க முடியாத ஒரு சக்தியாக வளர்ந்து விட்டனர். அதற்கு ரெட்டி சகோதரர்கள் சோனியாவுக்கும், சீனா நாட்டுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் இவர்கள் அரசியலுக்கு வர சோனியாவின் ஒரு முடிவே காரணமாக அமைந்தது. அதுபோல சீனாவுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டீல் தேவை மிக, மிக அதிகமாக இருந்தது. அதற்கான மூலப்பொருட்கள் ரெட்டி சகோ தரர்களின் சுரங்கங்களில் இருந்தே சென்றது. இது அவர் களை பொருளாதாரத்தில் செழிப்பாக்கியது. இந்த இரண்டும் ஒரு சேர நடந்தது தான் ரெட்டி சகோதரர்களின் அதிர்ஷ்டமாகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு 1999-ல் சோனியா முதன் முதலாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். ராஜீவ் வென்ற அமேதியில் களம் இறங்க அவர் நினைத்தார். ஆனால் அங்கு வெற்றி கிடைக்குமா? என்பதில் சோனியாவுக்கு சந்தேகம் வந்தது.
எனவே காங்கிரஸ் மிகவலுவாக இருக்கும் தொகுதி எது என்று ஆய்வு செய்தார். அதன்படி பெல்லாரி தொகுதியில் நிற்க தீர்மானித்து வேட்பு மனுத்தாக்கலும் செய்தார்.

சோனியாகாந்தியை பாராளுமன்றத்துக்குள் வர விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்த பா.ஜ.க. தலைவர்கள் சோனியா வுக்கு எதிராக பெல்லாரி தொகுதியில் சுஷ்மா சுவ ராஜைகளம் இறக்கினார்கள். சுஷ்மா சுவராஜிக்கு பம்பரமாக சுழன்று வேலை செய்ய பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சல்லடை போட்டு தேடினார்கள். அந்தசமயத்தில் அவர்களின் ஏகோபித்த தேர்வாக ரெட்டி சகோதரர்கள் இருந்தனர். அந்த காலக்கட்டத்தில் காங்கிரசின் சில தொழில் கொள்கைகளால் ரெட்டி சகோதரர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த நேரத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்களே அழைத்ததும், ரெட்டி சகோதரர்கள் குஷியாகி விட்டனர். உடனடியாக பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சுஷ்மா சுவராஜிக்காக பணத்தை தண்ணீராக செலவழித்து பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மிரண்டு போகும் வகையில் ரெட்டி சகோதரர்களின் பிரசார பலம் இருந்தது. என்றாலும் அந்த தேர்தலில் சுஷ்மா தோல்வியைத்தான் தழுவினார். சோனியா ஓரளவு ஓட்டுக்கள் வாங்கி வெற்றி பெற்றார்.

ஆனால் அமேதியிலும் வெற்றி பெற்றிருந்த காரணத்தால் அந்த தொகுதியை வைத்துக் கொண்டு பெல்லாரி தொகுதியை சோனியா வேண்டாம் என்று கழித்தார். இது பெல்லாரி மக்கள் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக திருப்பிய ரெட்டி சகோதரர்கள் மிக எளிதாக பெல்லாரி மாவட்டத்தை பா.ஜ.க. பக்கம் சாய்த்து விட்டனர். பெல்லாரி மாவட்டம் முழுவதும் ஏழைகளுக்கு உதவி, ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு உதவி, ஏழை பெண்களுக்கு திருமணம், ஆதரவற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு என்று ஏராளமான நிகழ்ச்சிகளை ரெட்டி சகோதரர்கள் நடத்தினார்கள். இதன் காரண மாக பெல்லாரி மாவட்டம் பா.ஜ.க. கோட்டையாகவே மாறியது. 2002-ல் ரெட்டி சகோதரர்களுக்கு இரும்பு சுரங்கம் ஒன்று கிடைத்தது. அந்த காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் இரும்புக்கு அதிகதேவை இருந்தது. இது ரெட்டி சகோதரர்களை மேலும் வளப்படுத்தியது. அந்த உற்சாகத்தில் அவர்கள் அரசியலிலும் முன்னிலை பெற தொடங்கினார்கள். 2004 பாராளுமன்ற தேர்தலில் பெல்லாரி தொகுதியில் கருணாகர ரெட்டி வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 2009 தேர்தலில் பெல்லாரி தொகுதி தனி தொகுதியானது. இதை யடுத்து ரெட்டி சகோதரர்கள் நிறுத்திய சாந்தா என்ற பெண் (மந்திரி ஸ்ரீராமுலு வின் சகோதரி) வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

முன்னதாக 2008ல் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடந்த போது ரெட்டி சகோதரர்கள் பணத்தை மழையாக பொழிந்தனர். 225 தொகுதிகளிலும் ரெட்டி சகோதரர்கள் கொடுத்த பணத்தால் பா.ஜ.க. வேட்பாளர்கள் தீவிரபிரசாரம் செய்தனர். ரெட்டி சகோதரர்கள் அள்ளி வீசிய பணம் 225 தொகுதிகளிலும் விளையாடியதால் காங்கிரசார் திணறிப்போனார்கள். 110 இடங்களில் பா.ஜ.க. வென்றது. பெல்லாரி மாவட்டத்தில் உள்ள 35 சட்டசபை தொகுதிகளில் 30 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது. ரெட்டி சகோதரர்களின் தனிப்பட்ட செல்வாக்கே இத்தகைய வெற்றிக்கு காரணமாகும். 110 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்ற போதிலும் ஆட்சி அமைக்க 3 இடங்கள் குறைவாக இருந்தது. அந்த சமயத்திலும் ரெட்டி சகோதரர்கள்தான் பா.ஜ.க.வுக்கு கைகொடுத்தனர்.
அவர்கள் விரித்தவலையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் விழுந்தனர். இதனால் சட்டசபையில் பா.ஜ.க. பலம் 117 ஆக உயர்ந்தது. எடியூரப்பா எந்த விதசிக்கலும் இல்லாமல் ஆட்சி அமைத்தார்.

ரெட்டி சகோதரர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த் தன ரெட்டி, சோமசேகர ரெட்டி மூவரும் பெல்லாரி மாவட்டத்தில் இருந்து எம்.எல்.ஏ.க்களாக வென்று சட்டசபைக்கு வந்திருந்தனர். பல நூறு கோடி ரூபாய்களை வாரி இறைத்த அவர்கள் அமைச்சரவையில் முக்கிய இலாகாகளை எதிர்பார்த்தனர்.
பா.ஜ.க. மேலிடமும் 3-ல் 2 பேருக்கு மந்திரி பதவி கொடுக்கலாம் என்று பச்சைக்கொடி காட்டியது. இதையடுத்து கருணாகர ரெட்டிக்கு வருவாய் துறையையும், ஜனார்த்தன ரெட்டிக்கு சுற்றுலா துறையையும் எடியூரப்பா ஒதுக்கீடு செய்தார். அப்போதே எடியூரப்பா மீது ரெட்டி சகோதரர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. என்றாலும் அமைதி காத்தனர். சமீபத்தில் பெய்த மழைச் சேதம் பெல்லாரி மாவட்டத்தை புரட்டி போட்டு விட்டது. அங்கு சீரமைப்பு பணிகளை செய்வதில் எடியூரப்பா பாரபட்சம் காட்டுவதாக நினைத்த ரெட்டி சகோதரர்களுக்கு ஆத்திரத்தை அடக்க முடிய வில்லை. இந்த நிலையில் சுரங்கத் தொழிலுக்கு புதுவரி, பெல்லாரி மாவட்ட அதிகாரிகள் மாற்றம் என்று ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக சில அதிரடி நடவடிக்கைகளை எடியூரப்பா எடுத்தார்.
இது ரெட்டி சகோதரர் களை பொங்கி எழச்செய்து விட்டது. அடுத்து அவர்கள் அதிகாரத்தை கைப்பற்று வார்களா? அல்லது அடங்கி போவார்களா? என்று தெரியவில்லை. அவர்கள் முடிவைப் பொறுத்தே அவர்களது அரசியல் எதிர் காலம் மட்டுமல்ல சுரங்க தொழில் எதிர்காலமும் அமையும்.

Thursday, October 22, 2009

பேராண்மை -ஆண்மைத் தனம்

இந்திய ராக்கெட்டை வீழ்த்தி வளர்ச்சியை நாசம் செய்ய வரும் வெளிநாட்டு தீவிரவாத கும்பலை ஐந்து மாணவிகளுடன் எதிர்த்து அழிக்குள் இளைஞன் கதை.

வன இலாகா ஊழியர் துருவன். பழங்குடி இனத்தை சேர்ந்தவன். என்.சி.சி. மாணவிகளுக்கு பயிற்சியும் அளிக்கிறான். துருவனிடம் பயிற்சிக்கு வரும் ஐந்து மாணவிகள் அவனை தாழ்ந்த ஜாதி என இழிவு படுத்துகின்றனர். மேல் அதிகாரியிடம் மாட்டி விட்டு இம்சை படுத்துகின்றனர். தொல்லைகளை பொறுமையாக தாங்கிக்கொள்கிறான்.

அந்த மாணவிகளை காட்டுக்குள் ஒரு நாள் பயிற்சிக்காக அழைத்து போகிறான் துருவன். அங்கு வேன் விபத்தாகிறது. ஊருக்கு திரும்ப முடியாமல் மலை உச்சியில் டெண்ட் போட்டு தங்குகின்றனர். இருட்டில் இரு வெள்ளைக்காரர்கள் நவீன எந்திர துப்பாக்கிகளுடன் போவதை ஒரு மாணவி பார்த்து துருவனிடம் சொல்கிறாள். அவர்கள் இந்தியா ஏவ உள்ள ராக்கெட்டை அழிக்க வந்த அயல் தேச கூலிப்படை என்பதை துருவன் புரிகிறான். தீவிரவாதிகளை அழிக்க புறப்படுகிறான். மாணவிகளும் தேசத்தை காப்பாற்ற நாங்களும் வருவோம் என பிடிவாதம் செய்து துருவனுடன் செல்கின்றனர்.

ஒரு இடத்தில் பதினாறு தீவிரவாத கும்பலை எதிர்த்து துருவனும் மாணவிகளும் சண்டையிடுகின்றனர். இரு மாணவிகள் பலியாகிறார்கள். இன்னொரு புறம் ராக்கெட்டை குறிபார்த்து சுட ஏவுகணையை நிறுத்தி விடுகின்றனர். அதை எப்படி தடுக்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.

துருவனாக வரும் ஜெயம் ரவி ராம்போ கெட்டப்பில் கம்பீரம் காட்டுகிறார். சாதி ரீதியாக உயர் அதிகாரியும் மாணவிகளும் இழிவுபடுத்துவதை சகிப்பது... மாணவிகளுக்குபயிற்சி அளிக்கும் துறுதுறுப்பில் முத்திரை பதிக்கிறார்.
மாணவிகளுடன் காட்டுக்குள் நுழைந்ததும் சீன்கள் ஹாலிவுட் ஸ்டைலுக்கு மாறுகின்றன. இரு வெள்ளைக்காரர்கள் நவீன ஆயுதங்களுடன் பிரவேசமானதும் பெரிய விபரீதம் நடக்கப்போகும் திகில்...

மலைக்குன்றுகளை கடந்து தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் போது பதினாறு பேர் அணி வகுத்து வருவது திக்... திக்... நோட்டம் பார்க்க முன்னால் வரும் நான்கு தீவிரவாதிகளை மரத்தின் உச்சியில் இருந்து ஜெயம் ரவி கொல்வது மிரட்சி.
கிளைமாக்ஸ் துப்பாக்கி சண்டை ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் ஹைடெக் ரகம். காடே தீப்பிழம்பாகி சீட் நுனியில் உட்கார வைக்கிறது. ஜெயம் ரவி ஆக்ஷன் தனத்தை அழுத்தமாக பதித்துள்ளார். என்.சி.சி. மாணவிகளாக வரும் தன்சிகா, லியாஸ்ரீ, சரண்யா, வர்ஷா, வசுந்தராவின் குறும்புத்தனங்களில் “ஏ” வாடை. இறுதியில் எந்திர துப்பாக்கிகளுடன் ஆவேசமாக சண்டையிட்டு அனல் பறத்துகின்றனர்.

வில்லனாக வரும் ஹாலிவுட் நடிகர் ரோலந்த் கிக்சிங்கும் அவர் கூட்டாளிகளும் மிரட்டுகின்றனர் வடிவேலு சிரிக்க வைக்கிறார். பொன்வண்ணன், ஊர்வசி பார்திரங்களும் கச்சிதம். ஜெயம் ரவியை சாதியை வைத்து இழிவு செய்வதிலேயே ஆரம்ப காட்சிகளை நீட்டிப்போவது சலிப்பூட்டுகிறது.

இரட்டை அர்த்த வசனங்களும் தாராளமாய் புழங்குகின்றன. ஆனாலும் போகப்போக சீன்களை வேகப்படுத்தி ஹாலிவுட் தரத்துக்கு உயர்கிறார் இயக்குனர் ஜனநாதன். சாதாரண வன ஊழியர் சாதித்ததை மேலதிகாரி செய்ததாக பெயர் வாங்கி ஜனாதிபதி விருது பெறுவதன் மூலம் நடைமுறை குளறுபடிகளுக்கு குட்டும் வைத்துள்ளார்.

வித்யாசாகர் இசையும், காட்டுக்குள் நடக்கும் போரை கண்ணுக்குள் நிறுத்தும் சதீஷ்குமார் ஒளிப்பதிவும் பெரிய பலம்.

யுத்தக்காலத்தில் இந்தியா, இலங்கைக்கு ஆயுதம் வழங்கியது உண்மையே

யுத்தத்தில் வெற்றிப் பெறுவதை விட, சமாதானத்தை வெற்றி கொள்வதே மிகவும் சிக்கலானது என இந்திய கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் உறுப்பினரான பேராசியர் பிரம்மா செல்லசாமி தெரிவித்துள்ளார்.

சமூகத்தினுள் கூட்டு வன்முறைகளை கையாளும் எந்த குழுவும், நீதிக்கு முரணானதே எனவும் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யுத்தகாலத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கொடுமையாக கொல்லப்பட்டமை உண்மையே என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதான செயலக தலைவர் புலித்தேவன் உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் வெள்ளை கொடிகளுடன் மே மாதம் 17ம் திகதி காலப்பகுதியில் சரணடைந்தனர்.
இது தொடர்பில் சரணடைவதற்கு முன்னர், ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன், ஐக்கிய நாடுகளின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் மற்றும் ஐக்கிய நாடுகளின் பல சிரேஷ்ட்ட உறுப்பினர்களுடனும் அவர்கள் செய்மதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இதில் வெளிவிவகார அமைச்சர் பாலித்த கோகொன்னவும் இணைந்திருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சரணடைந்த புலி உறுப்பினர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கொலை செய்யப்பட்டதாக பேராசிரியர் செல்லசாமி தெரிவித்துள்ளார்.
இதற்கு தேசிய புலனாய்வு துறையினர் பாரிய ஒத்துழைப்பை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கிழக்கு யுத்ததின் போது, சரணடைந்ததாக கூறப்படும் 600 பொலிசாரை புலிகள் கொன்றமை தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், மனித உரிமை மீறல்களும், யுத்த குற்றங்களும் யுத்த காலங்களில் செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு தரப்பினர் மீது பொதுவான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அரசாங்கம் தமது பாரிய எறிகனை வீச்சுக்களை நடத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்று குவித்தது, விடுதலைப் புலிகள் பொது மக்களை தடுத்து வைத்து கேடயங்களாக பயன்படுத்தியமையும் அது போன்றதுதான்.
ஆனால் அவை அனைத்தும் சாட்சியமற்று மறைந்து போனது.
அரசாங்கம் யுத்த பிரதேசங்களுக்கு சுயாதீன செய்தியாளர்களை அனுப்பாததன் மூலம் அவை அனைத்தையும் மறைத்து விட்டது என்பதே உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்தியா இலங்கைக்கு ஆயுதம் வழங்கிய தொடர்பில் எவ்வித சந்தேகமும் இல்லை என தெரிவித்த அவர் கப்பல் மற்றும் புலனாய்வு உதவிகளையும் யுத்த காலத்தில் இலங்கைக்கு இந்தியா வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
இது இலங்கை மீதான வெளிநாடுகளின் ஆதிக்கத்தை குறைக்கும் பொருட்டே மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஆதிக்கம் அற்ற, சமாதானமான இலங்கையையே இந்தியா விரும்புவதாக தெரிவித்த அவர், அதன் காரணமாக பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளின் இலங்கை மீதான ஆதிக்கத்தை இந்தியா கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிராந்திய வல்லரசுக்கான போட்டியின் மத்தியில் இலங்கை மக்கள் உட்படுத்தப்படுவது, இலங்கை மற்றம் ஆசிய மக்களுக்கு உகந்தது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே இலங்கையின் மீள் கட்டுமானம் மற்றும் சீர்படுத்தலுக்கான முனைப்புகளை இந்தியா மேற்கொள்ள வேண்டிய நிலை உருவானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒரு நடவடிக்கை மாத்திரமே, தமிழர்களின் நீண்டநாள் கலாசார மற்றும் அரசியல் அபிலாசைகள் மீதான சந்தேகங்களுக்கு விடையாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இலங்கையின் நீண்டநாள் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவின் நடவடிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்க பதிலளித்த அவர், இந்த விடயம் தொடர்பில் இந்தியாவில் மாத்திரம் செய்யக்கூடிய விடயம் என்ற ஒன்றை தனியாக அடையாளப்படுத்த முடியாதிருப்பதாக தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கமே அக்கறை செலுத்தி தமது முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அது,தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், இலங்கையின் முப்படையிலும், இனரீதியாவும், சமய ரீதியாகாவும் ஒதுக்கப்படாமல், சமூகத்தின் அனைத்து அங்கங்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அக்கறை செலுத்த வேண்டியதும், விரும்ப வேண்டியதும் அனைவரினதும் பொறுப்பாகவே தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முத்துவேல் கருணாநிதி போன்ற தமிழக அரசியல் வாதிகள், இலங்கை தமிழர்களை வைத்து, அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் முகாம்களில் சிக்கயிருக்கின்ற மக்கள் தொடர்பில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் இல்லை எனவும் அவர் இந்த செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக மக்களின் மத்தியில் ஓர் மாயையை ஏற்படுத்தும் வகையிலேயே, தமிழக நாடாளுமன்ற குழுவை இலங்கைக்கு அனுப்பிவைத்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையிலேயே இலங்கையின் முகாம்களுக்குள் இந்திய நாடாளுமன்ற குழு அனுமதிக்கப்பட்டனர் எனவும் பேராசிரியர் செல்லசாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தில் இருக்கின்றமையால், சீனா, இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யுத்தக்காலங்களில் ஒத்துழைப்பு வேண்டி, இந்திய, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை முறையாக முகாமைப்படுத்திய ஜனாதிபதி, யுத்த நிறைவுக்கு பின்னர் அவற்றை ஒதுக்கி வெற்றிகளை தனித்து கொண்டாடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் தற்போதைய சமாதான காலத்திலும், இலங்கையின் இராணுபடையணியை விஸ்த்தரிக்கும் வகையில் வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களை ஜனாதிபதி மேலும் அதிகரித்துள்ளார்.
ஏற்கனவே இலங்கை இராணுவம் ஆளணியில் பிரித்தானியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் இராணுவ ஆளணியை விட பெரியதாக இருப்பதாக தெரிவித்த அவர், புலிகள் வெற்றிக்கொள்ளப்பட்டதன் பின்னர், இவ்வாறான படையணி அதிகரிப்புக்கான அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

Saturday, October 17, 2009

தீபாவளி நல்வழ்த்துக்கள்

என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அனைவரும் எச்சரிக்கையுடன் தீபாவளியை கொண்டாடுங்கள்.