ஒட்டு மொத்த இந்தியாவே உற்றுப்பார்க்கும் வகையில் கர்நாடக அரசியலில் திடீர் சூறாவளி புயலை ஏற்படுத்தி விட்டனர் ரெட்டி சகோதரர்கள்.
இவர்களை பெல்லாரி சகோதரர்கள் என்றும் அழைக்கிறார்கள்.
ரெட்டி சகோதரர்கள் மொத்தம் 3 பேர்.
மூத்தவர் கருணாகர ரெட்டி (வயது47), 2-வது சகோதரர் ஜனார்த்தன ரெட்டி (45), கடைசி சகோதரர் சோமசேகர ரெட்டி (43). இவர்களது பூர்வீகம் ஆந்திரா. தொழில் நிமித்தம் காரணமாக கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்துக்கு சென்றவர்கள். அங்கேயே செட்டிலாகிவிட்டனர்.
பெல்லாரி மாவட்டம், இந்தியாவில் தாதுப்பொருள் சுரங்கத்தொழிலில் நம்பர்-ஒன் மாவட்டமாகும். இந்த மாவட்டம் முழுவதும் சுரங்கத் தொழில் நடக்கிறது. இதனால் இந்திய சுரங்க தொழிலின் தலைநகரம் என்று பெல்லாரி நகரை அழைக்கிறார்கள்.இந்த சுரங்கங்களில் கணிசமானவை ரெட்டி சகோதரர்கள் வசம்தான் உள்ளது. ஒவ்வொரு சுரங்கமும் பல ஆயிரம் கோடியை வாரி, வாரி கொடுத்துக் கொண்டிருக்கிறது. பணத்துக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் கள் கோடிகளின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
இந்த பொருளாதார வசதி அவர்களுக்கு ஆள்பலத்தை தானாகவே தேடி கொடுத்து விட்டது. ரெட்டி சகோதரர்களிடம் உள்ள சிறப்பு குணம், மற்றவர் களுக்கு உதவுவது.
பெல்லாரி மாவட்டம் முழுவதும் நலச்சங்கங்கள் அமைத்து உதவிகள் செய்து வருகிறார்கள். இதனால் பெல்லாரி மாவட்டத்தில் ரெட்டி சகோதரர்களுக்கு மக்களிடம் அபரிதமான செல்வாக்கு உள்ளது. பணபலம், ஆள்பலம் மிக்க இவர்களுக்கு அரசியல் பாரம்பரியம் எதுவும் கிடையாது. அவர்கள் அரசியலில் காலடி எடுத்து வைத்தே சுமார் 10 ஆண்டுகள்தான் ஆகிறது. மிக குறுகிய காலத்தில் அவர்கள் கர்நாடகா அரசியலில் அசைக்க முடியாத ஒரு சக்தியாக வளர்ந்து விட்டனர். அதற்கு ரெட்டி சகோதரர்கள் சோனியாவுக்கும், சீனா நாட்டுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் இவர்கள் அரசியலுக்கு வர சோனியாவின் ஒரு முடிவே காரணமாக அமைந்தது. அதுபோல சீனாவுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டீல் தேவை மிக, மிக அதிகமாக இருந்தது. அதற்கான மூலப்பொருட்கள் ரெட்டி சகோ தரர்களின் சுரங்கங்களில் இருந்தே சென்றது. இது அவர் களை பொருளாதாரத்தில் செழிப்பாக்கியது. இந்த இரண்டும் ஒரு சேர நடந்தது தான் ரெட்டி சகோதரர்களின் அதிர்ஷ்டமாகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு 1999-ல் சோனியா முதன் முதலாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். ராஜீவ் வென்ற அமேதியில் களம் இறங்க அவர் நினைத்தார். ஆனால் அங்கு வெற்றி கிடைக்குமா? என்பதில் சோனியாவுக்கு சந்தேகம் வந்தது.
எனவே காங்கிரஸ் மிகவலுவாக இருக்கும் தொகுதி எது என்று ஆய்வு செய்தார். அதன்படி பெல்லாரி தொகுதியில் நிற்க தீர்மானித்து வேட்பு மனுத்தாக்கலும் செய்தார்.
சோனியாகாந்தியை பாராளுமன்றத்துக்குள் வர விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்த பா.ஜ.க. தலைவர்கள் சோனியா வுக்கு எதிராக பெல்லாரி தொகுதியில் சுஷ்மா சுவ ராஜைகளம் இறக்கினார்கள். சுஷ்மா சுவராஜிக்கு பம்பரமாக சுழன்று வேலை செய்ய பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சல்லடை போட்டு தேடினார்கள். அந்தசமயத்தில் அவர்களின் ஏகோபித்த தேர்வாக ரெட்டி சகோதரர்கள் இருந்தனர். அந்த காலக்கட்டத்தில் காங்கிரசின் சில தொழில் கொள்கைகளால் ரெட்டி சகோதரர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த நேரத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்களே அழைத்ததும், ரெட்டி சகோதரர்கள் குஷியாகி விட்டனர். உடனடியாக பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சுஷ்மா சுவராஜிக்காக பணத்தை தண்ணீராக செலவழித்து பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மிரண்டு போகும் வகையில் ரெட்டி சகோதரர்களின் பிரசார பலம் இருந்தது. என்றாலும் அந்த தேர்தலில் சுஷ்மா தோல்வியைத்தான் தழுவினார். சோனியா ஓரளவு ஓட்டுக்கள் வாங்கி வெற்றி பெற்றார்.
ஆனால் அமேதியிலும் வெற்றி பெற்றிருந்த காரணத்தால் அந்த தொகுதியை வைத்துக் கொண்டு பெல்லாரி தொகுதியை சோனியா வேண்டாம் என்று கழித்தார். இது பெல்லாரி மக்கள் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக திருப்பிய ரெட்டி சகோதரர்கள் மிக எளிதாக பெல்லாரி மாவட்டத்தை பா.ஜ.க. பக்கம் சாய்த்து விட்டனர். பெல்லாரி மாவட்டம் முழுவதும் ஏழைகளுக்கு உதவி, ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு உதவி, ஏழை பெண்களுக்கு திருமணம், ஆதரவற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு என்று ஏராளமான நிகழ்ச்சிகளை ரெட்டி சகோதரர்கள் நடத்தினார்கள். இதன் காரண மாக பெல்லாரி மாவட்டம் பா.ஜ.க. கோட்டையாகவே மாறியது. 2002-ல் ரெட்டி சகோதரர்களுக்கு இரும்பு சுரங்கம் ஒன்று கிடைத்தது. அந்த காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் இரும்புக்கு அதிகதேவை இருந்தது. இது ரெட்டி சகோதரர்களை மேலும் வளப்படுத்தியது. அந்த உற்சாகத்தில் அவர்கள் அரசியலிலும் முன்னிலை பெற தொடங்கினார்கள். 2004 பாராளுமன்ற தேர்தலில் பெல்லாரி தொகுதியில் கருணாகர ரெட்டி வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 2009 தேர்தலில் பெல்லாரி தொகுதி தனி தொகுதியானது. இதை யடுத்து ரெட்டி சகோதரர்கள் நிறுத்திய சாந்தா என்ற பெண் (மந்திரி ஸ்ரீராமுலு வின் சகோதரி) வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
முன்னதாக 2008ல் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடந்த போது ரெட்டி சகோதரர்கள் பணத்தை மழையாக பொழிந்தனர். 225 தொகுதிகளிலும் ரெட்டி சகோதரர்கள் கொடுத்த பணத்தால் பா.ஜ.க. வேட்பாளர்கள் தீவிரபிரசாரம் செய்தனர். ரெட்டி சகோதரர்கள் அள்ளி வீசிய பணம் 225 தொகுதிகளிலும் விளையாடியதால் காங்கிரசார் திணறிப்போனார்கள். 110 இடங்களில் பா.ஜ.க. வென்றது. பெல்லாரி மாவட்டத்தில் உள்ள 35 சட்டசபை தொகுதிகளில் 30 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது. ரெட்டி சகோதரர்களின் தனிப்பட்ட செல்வாக்கே இத்தகைய வெற்றிக்கு காரணமாகும். 110 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்ற போதிலும் ஆட்சி அமைக்க 3 இடங்கள் குறைவாக இருந்தது. அந்த சமயத்திலும் ரெட்டி சகோதரர்கள்தான் பா.ஜ.க.வுக்கு கைகொடுத்தனர்.
அவர்கள் விரித்தவலையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் விழுந்தனர். இதனால் சட்டசபையில் பா.ஜ.க. பலம் 117 ஆக உயர்ந்தது. எடியூரப்பா எந்த விதசிக்கலும் இல்லாமல் ஆட்சி அமைத்தார்.
ரெட்டி சகோதரர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த் தன ரெட்டி, சோமசேகர ரெட்டி மூவரும் பெல்லாரி மாவட்டத்தில் இருந்து எம்.எல்.ஏ.க்களாக வென்று சட்டசபைக்கு வந்திருந்தனர். பல நூறு கோடி ரூபாய்களை வாரி இறைத்த அவர்கள் அமைச்சரவையில் முக்கிய இலாகாகளை எதிர்பார்த்தனர்.
பா.ஜ.க. மேலிடமும் 3-ல் 2 பேருக்கு மந்திரி பதவி கொடுக்கலாம் என்று பச்சைக்கொடி காட்டியது. இதையடுத்து கருணாகர ரெட்டிக்கு வருவாய் துறையையும், ஜனார்த்தன ரெட்டிக்கு சுற்றுலா துறையையும் எடியூரப்பா ஒதுக்கீடு செய்தார். அப்போதே எடியூரப்பா மீது ரெட்டி சகோதரர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. என்றாலும் அமைதி காத்தனர். சமீபத்தில் பெய்த மழைச் சேதம் பெல்லாரி மாவட்டத்தை புரட்டி போட்டு விட்டது. அங்கு சீரமைப்பு பணிகளை செய்வதில் எடியூரப்பா பாரபட்சம் காட்டுவதாக நினைத்த ரெட்டி சகோதரர்களுக்கு ஆத்திரத்தை அடக்க முடிய வில்லை. இந்த நிலையில் சுரங்கத் தொழிலுக்கு புதுவரி, பெல்லாரி மாவட்ட அதிகாரிகள் மாற்றம் என்று ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக சில அதிரடி நடவடிக்கைகளை எடியூரப்பா எடுத்தார்.
இது ரெட்டி சகோதரர் களை பொங்கி எழச்செய்து விட்டது. அடுத்து அவர்கள் அதிகாரத்தை கைப்பற்று வார்களா? அல்லது அடங்கி போவார்களா? என்று தெரியவில்லை. அவர்கள் முடிவைப் பொறுத்தே அவர்களது அரசியல் எதிர் காலம் மட்டுமல்ல சுரங்க தொழில் எதிர்காலமும் அமையும்.
Tuesday, November 3, 2009
Subscribe to:
Posts (Atom)